மாணாக்கர் (இலக்கணம்)
அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.
மாணாக்கர் வரலாறு
- தன்மகன்,
- தன்னுடைய ஆசிரியருடைய மகன்,
- நாட்டையாளும் அரசனுடைய மகன்,
- பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன்,
- தன்னை வணங்கி வழிபடுபவன்,
- சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்
ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [1] மாணாக்கர் வகை [2]
- தலை மாணாக்கர்
- பால் கலந்த நீரில் பாலை மட்டும் உண்ணும் அன்னம் போன்றவர். [3]
- ஈரம் கலந்த மண்ணில் சத்தை மட்டும் கொள்ளும் மரவேர் போன்றவர்
- கிடைக்கும் புல்லை விரைந்து உண்டு அசை போடும் பசு போன்றவர்
- இடை மாணாக்கர்
- உழும் அளவுக்குப் பலன் தரும் மண் போன்றவர்.
- சொன்னதை மட்டும் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்
- கடை மாணாக்கர்
- ஓட்டைக் குடம் போல ஆசிரியர் சொன்னதையெல்லாம் மறப்பவர்.
- செடிக்கொரு வாயாகக் கடித்து மேயும் ஆடு போன்றவர்
- தெளிந்த நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை போன்றவர்
- பன்னாடை போல் சாற்றை வடிய விட்டுவிட்டுச் சக்கையைப் பற்றிக்கொள்பவர்
மாணாக்கர் ஆகாதவர் [4]
- மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் என்று மாணாக்கர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
- கள்ளுண்டு களிப்பவன்,
- சோம்பல் உடையவன்,
- தன்னைத் தானே பெருமை பேசிக்கொள்பவன்,
- காமுகன்,
- கள்வன்,
- நோயாளி,
- அறிவில் ஏழையானவன்,
- குணம் மாறுபடப் பேசுபவன்,
- சினமுடையவன்,
- மிகுதியாக உறங்குபவன்,
- மந்த புத்திக்குச் சொந்தக்காரன்,
- தொன்னூல்களைக் கற்க அஞ்சுபவன்,
- அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாதவன்,
- பாவத்தைச் செய்யும் இயல்பு கொண்டவன்,
- பொய் பேசுபவன்
ஆகிய 15 பேரும் மாணாக்கர் ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
உயிர் வாழ்வதற்கு உரிய அறிவுரை கூறும் இந்த நூல் மாணாக்கராய் இருந்து நூல் கேட்பதற்கு உரியவர் இன்னின்னார் என்று குறிப்பிடுகிறது. [5]
- அட்டைபோல் ஆசிரியரைத் துன்புறுத்திப் பெறுபவர்
- கழுகு போல் ஆசிரியர் சுவடிகளைக் கவர்ந்து செல்வோர்
ஆகிய உவமைகள் இதில் புதுமையானவை.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ நன்னூல் 37
- ↑ நன்னூல் 38
- ↑ நீரிலுள்ள காற்றை மட்டும் மூச்சாக்கிக்கொள்ளும் மீன் போல அக்கால அன்னம் பாலை மட்டும் பிரித்துண்ணும் உறுப்பினைப் பெற்றிருந்தது போலும்
- ↑ நன்னூல் 39
- ↑
அட்டைக் கிளி வெருகு ஆடு எருமை வல்லூறு
குட்டற்குடம் கல்லொடு மண் - மட்டக்கள்
நெய்வடிநார் போல்வாரை நீத்து அன்னமே போலும்
மெய் உணர்வார் கேட்டல் விதி.